Tuesday, October 17, 2017

இஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்

Photo: Greenhouse gases
புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்களுடைய தாக்கம்தான் அது. அவர்களுடைய ஆற்றலே முழு குழுவிற்குமான ஆற்றல். ஆரம்பிப்பது என்னவோ ஒரே ஒருவனிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. பின்பு அது அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. இது தான் காலங்கள் தோறும் நடந்துவரும் புரட்சிகளின் நிதர்சனம். அந்த ஒரே ஒரு இயங்கு சக்தியை முடக்கிவிட்டால் முழு கூட்டத்தின் செயல்திரனும் ஸ்தம்பித்துவிடும். அந்த ஒற்றைப் புள்ளியை இனம் காணாமல் ஒரு பெரிய ஆற்றலை அணுகுவது காட்டுத்தீயை ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு அணைப்பதற்கு இணையானதாகும். இது ஆபத்தை விளைவிக்கும். ஒரு கூட்டத்தின் ஆற்றலை முடக்குவதற்கான வழி அதுவல்ல. கூட்டத்தில் ஒற்றையாக இருக்கும் மைய சக்தி அதுதான் மிக முக்கியம்.
அந்த ஒற்றை மைய சக்தி ஆக்கதிற்கு எப்போதும் செயல்படமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. அதனுடைய பேராற்றல் அனைத்தும் தேவையற்ற வீண் ஜம்பத்திற்கும் மிடுக்கிற்குமே வீணடிக்கப்படுகிறது. ஒருவன் தன்னுள் இருக்கும் ஆற்றலை ஒருபோதும் ஆக்க காரியத்திற்கு பயன்படுத்துவதேக் கிடையாது. அழிவுக்கு பயன்படுத்துவதும் கிடையாது. அது மொத்தத்தில் வீண் ஜம்பத்தில் விரயமாக்கப்படுகிறது. ஒன்று அழிதொழி அல்லது எதையாகிலும் பயன்படும்படி உருவாக்கு. இரண்டிற்கும் அல்லாது ரெண்டாங்கெட்டானாக இருந்தால் கைகள் இரண்டையும் மேலே ஒரு மரத்தில் கட்டி தொங்க வைத்து நீண்ட பிரம்பைக் கொண்டு பின்புறத்தில் முப்பது பிரம்படி “….” பழுக்கும் படி கொடுக்கப்படவேண்டும்.
ஏன் இந்த கோபம் என்று ஒருவர் கேட்கலாம். இது போன்ற கோபம் முதலாவது ஒரு ’சிரிப்பேராயரைப்’ பார்த்து உண்டானது. அவருக்கு முப்பது இல்லை ஐம்பது பிரம்படிகள் கொடுக்க வேண்டும் என்ற ஆத்திரம் ஒருமுறை உண்டானது. இதனை அப்போது நண்பர்களிடம் விவரிக்கும் போது என் மீது பாய ஆரம்பித்து விட்டார்கள். என்னுடைய எண்ணம் ஒரு பாசிச எண்ணமாம். மிகவும் ஆபத்தானதாம்.
முழு சமூகத்திற்கே தொந்தரவை கொடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு தண்டனையை இது போன்று கொடுக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அவர்களின் பிரதிநிதியாக ஒருவன், ”அந்த தண்டனையை கொடுத்தால்தான் என்ன என்று வார்த்தைகளில் முன்மொழிவான்”. அந்த முன்மொழியும் தருணத்தில் நம் கோபம் அனைத்தும் அந்த பிரச்சனைக்குரியவன் மீது அல்ல தண்டனைக் கொடுக்க வேண்டும் என்று யாரை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அவன் மீதும் அல்ல தண்டனையை கொடுக்க வேண்டும் என்று முன் மொழிந்தவன் மீதே திரும்பிவிடும்.
ஜெர்மனியில் மாபெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய யூதர்களை நாம் பிரச்சனைக்குரியவர்கள் என்று எப்போதாவது யோசித்ததுண்டா. இல்லவே இல்லை. காரணம் அவர்கள் தண்டிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியவனை அதனை செயல்படுத்தியவனைதான் நாம் இன்றும் தண்டனைக்குறியவனாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் அந்த பொருளாதார சீரழிவு? அது கண்கூடானது கிடையாதே. கொடுக்கப்பட்ட தண்டனைதான் கண்கூடானது. அது பார்ப்பதற்கே மிக மிகவும் திகிலானது. தண்டனையை ஒருவன் அனுபவிக்கும் தருணத்தில் புனிதனாகிவிடுகிறான் அல்லது நாம் அவனை அப்படி ஆக்கிவிடுகிறோம். கோடரியால் மண்டையில் அடித்துக் கொள்ளப்படாதவரை அடகுக்கடைக்காரி சமூகத்தின் ஒட்டுண்ணி. ரஸ்கோல்நிக்கோவ் அவளை கொன்றபிறகு நமக்கு அவள் மீது பரிதாபம் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது (நான் குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்). பிரம்பை கையில் வைத்திருக்கிறவன் மிகவும் கொடூரமானவனாக நம் கண்களில் தெரிய ஆர்மபித்துவிடுகிறான். யுகங்கள் அவனை பழிக்க ஆரம்பித்துவிடுகின்றன. சரி கோபம் மிதமிஞ்சிவிட்டதே என்ன செய்வது.
வேறுவழியே இல்லை இப்போது என்னைபோன்று அந்த கோபத்தை எழுத்தில் செலவிட்டுவிடவேண்டும். இல்லையென்றால் கோபம் என்ற அந்த ஆற்றல் விஷமாக மாறி நம்மையே கொன்றுவிடும். பாவம் மாணவர்கள் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். அப்பாவிகள். சாக்ரட்டீஸின் சீடர்கள். அறிவுபசி அவர்கள் மண்டையை தின்று கொண்டிருக்கிறது. தீனியை போடுவது ஆசிரியர்களின் தலையாய முதற்கண் கடமை.
இப்போது இருக்கும் பிரச்சனை இந்த அறிவுப்பசி கொண்ட பிளாட்டோவின் சீடர்கள் அல்ல. அவர்கள் மத்தியில் ஒன்றும் ஆறியாதவர்களாக (உதவாக்கரைகள் என்று சொன்னால் உங்கள் கண்முன் சிறுமைப்பட்டுபோவேன்) அமர்ந்திருக்கும் இஞ்சிகுஞ்சி இடியாப்பங்கள்தான் பிரச்சனையே. இஞ்சி என்று சொன்னது அதனுடைய ஆற்றலை மனதில் கொண்டுதான். அது மற்றவர்களையும் பாதிக்கிறதே. எப்படி இதனை கையாள்வது?
என்னைப் பொருத்தவரை இந்த இஞ்சியின் காட்டத்தை பரவவிடாமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனுடைய நெடி மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும். ’அச்’ ’அச்’ என்று வகுப்பறை முழுவது தும்மல் சத்தம் காதை கிழித்துவிடும்.
என்னிடம் அதன் காட்டம் வேலையைக் காட்டுமா என்ன? மூக்கை மூடிக் கொண்டேன். யாருக்குத் தெரியும் அது இஞ்சியின் காட்டமோ அல்லது மற்ற எதாவது நறுமணத்தின் காட்டமோ? அன்றைய உணவின் பூண்டு வேலை செய்திருக்கும். டர்ர்ர்ர். சிரித்துவைப்பதுதான் சிறந்தது. அந்த டர்ர்ர்ரைக் கேட்டுவிட்டு கோபப்பட்டு ”போடா வெளியே” என்று எப்படி விரட்டுவது. நமக்குத்தான் யார் என்றே தெரியாதே. எனக்கு தெரியும் சரி. ஏன்டா அந்த டர்ர்ர்ர் சத்தம் என்றால். “I didn’t do that”. என்று பவ்யமாக இருபான். அந்த பின்புற சதைப்பிண்டத்திற்கு பிரம்படி என்றால் பிரம்பிற்குத்தான் அசிங்கம். பிரம்பை தூக்கி எரிந்துவிட்டு அஹ்ஹஹா என்று சிரிக்க வேண்டியதுதான். எனக்கு கோபம் எல்லாம் மற்றவர்கள் மீதுதான். அவனை டர்ர்ர்ர் விடாதே என்று கண்டிக்க மாட்டார்களே என்பதற்காக அல்ல. டர்ர்ரைக் கட்டுப்படுத்த முடியாது. மற்ற மாணவர்கள் அந்த நறுமணத்தை ரசித்து நுகருகிறார்களே அதுதான் என் கோபம் எல்லாம்.
இரண்டு மணி நேரமாவது அடக்கி வைக்க வேண்டாமா? அப்படி என்ன போக்கிரிப் பட சங்கி மங்கி வடிவேலுவா அவர்கள் பை வெடித்து தண்ணீர் சிதற. எல்லாம் சும்மா விளையாட்டு. இருக்கிற ஒழுங்கை குலைப்பதற்கான சூட்சமம். மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. விட்டவனுக்கு பெரும் நிம்மதி. அந்த விஷமத்தின் ஆற்றல் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொண்டதே. கொட்டாவி விட்டால்தான் அது மற்றவர்களுக்கும் பரவும். இந்த ஆவியுமா? கோபத்தோடு பார்க்கிறேன் அவனும் ஹீ… என்று இளிக்கிறான். என்ன செய்ய. சிரிப்பதுதான் ஒரே வழி. இந்த பிராண அசௌகரியத்தில் பாடத்தை அனைவருமே கோட்டைவிட்டு விடுகிறோம். நம்முடைய இந்திய ஒழுக்கின்படி பரீட்சைக்கு ஐந்து நாட்களுக்கு முன் தான் அதெல்லாம் ஞாபகத்திற்கு வரவேண்டும். அதுவரையில் இந்த டர்ர் புர்ர் டமால் ஒன்றுதான் அவர்களுக்கு பொழுது போக்கு. எனக்கு வேலை இருக்கிறதப்பா. Le Miserable ஆர்டர் செய்து விட்டேன். அடுத்த சில மாதங்களுக்கு அந்த ஆயிரம் பக்கங்கள்தான் என்னுடைய தஞ்சம். நீங்களும் உங்கள் டர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமாளும்.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...