Friday, March 10, 2017

நெப்(போலியனின்) கைக்குட்டை

போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.

Thursday, March 9, 2017

காவியமான ஆனைச் சாத்தான்


கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

   கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பெயர் ஆயர்பாடி பெண்கள் மத்தியில் பெரும் கீர்த்திப் பெற்ற பெயர்.

Monday, March 6, 2017

குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள்

குஞ்சிதபாதத்தை அடிக்கடி சந்தித்துவருகிற நமக்கு அவருடைய பூர்வாங்கத்தைப் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா? ஒரு மகா புருஷன், அதுவும் கதையின் நாயகன். ஆரம்பம் என்று இல்லாமலா பொய் விடும்? யார் இந்த பூமியில் சுயம்புவாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆதியும் முடிவும் இருந்தாக வேண்டுமே. நம்முடைய குஞ்சிதபாதம் மாத்திரம் விதிவிலக்கா என்ன! அவனும் சொற்ப ஆயுள் கொண்ட அற்பப் பிறவிதானே. எனினும் எப்போதும் அரித்தெடுக்கிற நம்முடைய துருதுரு மண்டைக்கு அவனைப் பற்றி சில தகவல்களைத் தீனிபோட வேண்டியிருக்கிறது. தீர்மாணமான தகவல்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் எதாவது ’கிசு கிசு’வாவது நிச்சயம் இருந்தாக வேண்டும். உண்மைக்கு அடுத்து நாம் நம்பியிருக்கிற தார்மீகத் தகவல் கிசு கிசு மாத்திரம்தானே.

Wednesday, March 1, 2017

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் கட்டியங்காரனை சந்தித்தேன். உற்சாகத்தின் மிகுதியில் இருந்தார். நான் எதுவும் வாய் கொடுக்கவில்லை. ஏன் தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பக்திப் பழமாக அருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். அவர்தான் முதலில் பேச வேண்டும். அதுவே நியதி. மெல்ல பேச்சை ஆரம்பித்தார். ஆறு மாதமாக ஒரு கதை கருவை மனதில் போட்டு ஊறவைத்திருந்தேன். இன்று ஏனோ தெரியவில்லை அதைப் பற்றிய ஒரு புதிய அதுவும் முழுமையான பார்வை கிடைத்தது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு கதையை எழுத முற்பட்டுவிட்டேன். ஒரே மூச்சாகக் கதையை எழுதி முடித்துவிட்டேன். எங்கும் எதுவும் கொடுக்காத பரமானந்த நிலை என்னுள் இப்போது நிலவுகிறது என்றார். டைட்டில் ”கோமாளிக் கூத்தன் பஃப்பூன்”. இந்தக் கதை புதுமைப்பித்தனின் ”கயிற்றரவு” கதைக்கு இணையான புகழை எனக்கு ஈட்டித்தரப்போகிறது பார். சரி, டைட்டில் எப்படி என்றார். அவர் பேசுவார் பதில் எதிர்பார்க்க மாட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எனக்குள் சிரிப்பு வந்துவிட்டது. இந்தச் சாமியார்களுக்கும் சரி படைப்பாளிகளுக்கும் சரி பரமானந்த நிலை  என்றால் என்ன என்பது இன்றுவரை நமக்கு விளங்கியபாடில்லை. இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா. மேலும், எப்போது பார்த்தாலும் தன்னைப் புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டுக்கொள்வதற்கு எப்படித்தான் இந்த மனுஷனுக்கு மனம் வருகிறதோ. இப்படியே விட்டால் இன்னும் சில நாட்களில் தன்னைத் தாஸ்தாவஸ்கியுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும் செய்வார். அதற்குள் நல்ல மனநல மருத்துவரைப் பார்த்தாக வேண்டும்.


ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...