Monday, January 30, 2017

திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம்


இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும் மனிதர்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதே போன்று பெத்தவன், எங்கதெ போன்றவை யதார்த்ததின் வாழ்க்கையாக நம்மால் அறியப்படுகின்றன. இவைகள் மாத்திரமே கதைகளின் சிறப்பம்சங்களா? கதை மாந்தர்கள் கதையின் வாழும் யதார்த்ததிற்கு மிக அருகில் இருப்பவர்கள்.  இம்மாத உயிர்மையில் வெளியாகி இருக்கும் ”திருநீர்சாமி” கதை இமையத்தின் கதைசொல்லலின் வேறொரு பரிமாணத்தைச் சுட்டிக் காட்டுகிறது. கதைக்கு என்று மூன்று பிரதானக் கூறுகள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். கதைப் பாத்திரம், கதைக் கரு, மற்றும் உரையாடல். இவைகளில் முதல் இரண்டை இலக்கிய விமர்சனத்தில் அதிகம் வைத்து விவாதித்து விட முடியும். மூன்றாவதை அவ்வளவு எளிதில் இலக்கிய விமர்சனம் என்ற அளவுகோளில் வைத்து விவாதிக்க முடியாது. அது முற்றிலும் தத்துவம் சார்ந்த ஒன்று. உரையாடல் என்று வரும்போது அது தத்துவத்திற்கான ஒரு களம் அல்லது கருவி. சொல்லப்போனால் உடையாடலைக் கொண்டே கதையாடலைக் கூட சாத்தியப்படுத்திவிட முடியும். இமையம் தன்னுடைய பெரும்பாலான கதைகளைக் கதையாடல், அதாவது Narration, மூலம் அல்லாது உரையாடல் மூலமாகவே சாதித்து விடுவார். நாடகங்களின் சிறப்பியல்பு முழு நாடகத்தின் கதையும் கதை மாந்தர்களும் உரையாடல் என்ற ஒரே களத்தில் மாத்திரமே இயங்குவது. அந்தச் சாத்தியம் இமையத்தின் கதைகளில் உண்டு. கதையாடல் இன்றி உரையாடலே போதுமானது என இமையத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது. எனவே கதைமாந்தர்களைக் காட்டிலும், கதையாடலைக் காட்டிலும் உரையாடலே முதன்மையானது போன்றும் தோன்றுகிறது.  

Wednesday, January 11, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்

பண்டிகைகளும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும்
குஞ்சிதபாதத்தைச் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டன. நட்பு முறிந்துவிடக்கூடாதே என்று இடைவிடாமல் நான் தான் அவனைச் சந்தித்து வருகிறேன். ஒரு நாள் கூட அவன் என்னை வந்து பார்த்ததே கிடையாது.  ஒரு போன் கூட செய்ததில்லை. நான் தான் வெட்கமின்றி அவனைத் தொடர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய ஆத்மார்த்த நண்பன் யார் என்று கேட்டால் செல்லமாக ”குஞ்சிதம் தான் என் ஒரே நண்பன்” என்று பெருமிதப்பட்டுக் கொள்வேன். ஆனால் அப்படி ஒரு நினைப்புக் கூட அவனுக்குக் கிடையாது. அவனுக்கு இருக்கும் நட்பு வட்டாரத்தில் நான் பத்தோடு பதினொன்று. பெயரைக் குறிப்பிட்டுக் ”கட்டியங்காரனைப் பற்றி தெரியுமா” என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். சொல்லப்போனால் அவனுக்கு நண்பர்கள் என்ற வகையில் உயிருக்குயிரான நண்பர்கள் என்று செண்டிமெண்டெல்லாம் எதுவும் கிடையாது. அவன் பாட்டுக்கு அவன் உண்டு பல்கலைக்கழகம் உண்டு அவனுடைய விடுதி அறை உண்டு என்று வாழ்பவன். கற்கண்டைத் தேடி அலையும் எறும்புகளைப் போன்று அவனைத் தேடி எங்கிருந்து வந்துவிடுவார்களோ தெரியாது. எப்படி அவன் அநேக நண்பர்களைச் சம்பாத்தித்து வைத்திருக்கிறான் என்றெல்லாம் கூடத் தெரியாது. அவன் அந்த விடுதி அறைக்கு வந்துவிட்டால் ஒரு எறும்புக்கூட்டமே அவன் ரூமுக்கு அணிவகுத்துவிடும். அனைத்தும் அரைக்கிறுக்குப் பைத்தியங்கள். என்ன பெரிதாகப் பேசிவிடப் போகிறார்கள். புத்தகங்களைப் பற்றித்தான். வாழ்க்கையில் எவ்வளவு இருக்கிறது. சினிமா, கடற்கரை என்று அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. அட, கடற்கரைக்குச் செல்வது என்றால் கூட வாசிக்கவும் விவாதிக்கவும் தான். முற்றும் துறந்த சாமியார் பயல்கள். ஆனால் குஞ்சிதத்தை மாத்திரம் அப்படித் தப்பாக எடைபோட்டுவிட முடியாது. “குஞ்சிதம் குஞ்சிதம்” என்று செல்லமாக பேரைப் பாதி குறைத்து எப்போதும் அவனைச் சுற்றியே ஒரு பெண் சுற்றிக் கொண்டிருப்பாள். அதைப் பற்றி நாம் பின்பு ஒருநாள் பேசுவோம். அவன் எதையும் தேடிச் செல்வதில்லை. அனைத்தும் அவனையே மையமிட்டுக் கொண்டிருக்கும். நட்பு, காதல், என எதையும் அவன் உழைத்துப் பெற்றது கிடையாது. அனைத்தும் அவனைத் தேடியே வந்துகொண்டிருந்தன. அறிவும் அப்படித்தான். நான் மாங்கு மாங்கு என புத்தகங்களைப் படித்தாலும் ஒன்றும் மண்டையில் ஒட்டுவது கிடையாது. அவனுக்கு மாத்திரம் எப்படி இதெல்லாம் வாய்க்கிறது என்பது எனக்கு ஒரே பொறாமையாக இருக்கும்.

Friday, January 6, 2017

”Publish or Perish”



”Publish or Perish” என்று சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் இதைக் கேட்கும் போது உள்ளூர நடுக்கம் ஏற்படும். படிப்பு பிழைப்பு எல்லாம் இலக்கியம். வாழவே முடியாதோ என்ற பயம் அது. எழுதுவது என்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை கற்றுக் கொடுத்தவர் நண்பர் அபிலாஷ். அதனையே பதிப்பில் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு அதை விட அதிகம். என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை நான் உணர்ந்தது நணபர் அபிலாஷின் நட்பின் சூழலில் மாத்திரமே. அவருடைய நாவல் ’ரசிகன்’ பற்றி பல நாட்கள் என்னால் எதனையும் பேச முடியாமல் இருந்து வந்தது. ஏதோ ஒரு மையப்புள்ளியை நோக்கி என்னுடைய மௌனம் நாவலில் பயணித்துக் கொண்டிருந்தது. சடார் என்று ஒரு நாள் அந்த மையப்புள்ளியின் இருப்பிடம் தென்பட்டது. இரவு ஒரு மணிக்குள் மதிப்புரையை எழுதி முடித்து விட்டேன். இப்போது ”புத்தகம் பேசுது” இதழில் நூல் மதிப்புரையை பதிப்பில் பார்ப்பது பூரண மகிழ்ச்சியைத் தருகிறது. Thanks to Abilash.


Thursday, January 5, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்



அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டார். எரிச்சல் தாங்க முடியவில்லை. பொதுவாக எழுத்தாளர்களின் படைப்பு என்னவோ மகா அற்புதம் ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. பளார் என்று ஒரு அரை விடவேண்டும் போல் தோன்றும். தாங்கள் தான் இந்த பூமியில் வாழும் ஒரே ஜீவ ராசி என்றும் தாங்கள் மாத்திரம் தான் புதிதாக சுவாசிப்பது போலவும் வாழ்வது போலவும் மற்றவர்கள் வெறும் ஜடங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்தாளர்களின் நட்பு முகவும் முக்கியம். அதனால் ஏதாவது நமக்கும் கொஞ்சம் அறிவு ஊற்றெடுக்கும். நம்ம ஊர் பேராசிரியர்களுக்கு தற்பெருமை படைப்பாளிகள் எவ்வளவோ மேல். சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாக கட்டியங்காரன் பேசியதற்கு எல்லாம் மாடு போல் தலையாட்டினேன்.

Wednesday, January 4, 2017

அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம்


நேற்று இரவு ஒரே மனச் சோர்வு. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே விஷமாக மாறி என்னையே கொன்றுவிடும் போல் இருந்தது. தற்போது அனைவருக்கும் மன நோய் பிடித்திருப்பதால் யாரிடமும் போய் பேச்சுக் கொடுக்கவும் முடியாது. மீறி பேசச் சென்றால் உலகத்தில் உள்ள விஷமிக்க வைரஸ்களை விட நம்முடையவர்களின் மன நோய் வைரஸ் நம் மனதை எளிதில் பாத்தித்து விடும். மிகவும் ஆபத்தான தொற்று நோய் இது. இந்த நோய் தாக்கப்படாத ஒரே நபர் நம்முடைய குஞ்சிதபாதம் ஒருவர் தான். அவருடைய விடுதி அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். வெறுப்பைக் காட்டமாட்டார்.  

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...