Friday, November 11, 2016

தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா?


தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா? (கோமாளிக் குயிஸாட்டின் பதில்கள்)
சமுகத்தில் பாவப்பட்டவர்கள் என்று யாரேனும் ஒரு குழுவினர் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அவர்களுக்கான மீட்பு என்பது அவசியப்படுகிறதா. அப்படியே அவர்களை விடுதலையாக்க ஒருவன் வந்தாலும் அவன் தரும் விடுதலையை ஏற்பதற்கு அந்த அடிமைப்பட்ட மக்கள் தயாராக இருப்பார்களா. இவைகள் எல்லாம்  இன்னும் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடியவில்லை. இலட்சியவாதிகள் எப்போதும் தாங்கள் பாவ பட்ட ஜென்மங்களை விடுவிக்க பிறந்த மகா புருஷர்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் யாரும் தங்களுக்கான விடுதலையை விரும்பியதும் இல்லை உணர்ந்ததும் இல்லை. விடுதலை தேவை என்ற உணர்வு ஏற்பட்டால் தானே அவர்களுக்கு கிடைக்கப்போகும் விடுதலையை உண்மையான விடுதலை என்றும் தாங்கள் பாவப்பட்டவர்கள் என்றும் உணர்வார்கள். சொல்லப்போனால் பாவப்பட்டவர்கள், ஆள்கிறவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனை பிம்பங்களே.

இதனை முதலாவது தெளிவித்தவன் செர்வான்டிஸ். இரண்டாவது தாஸ்தாவஸ்கி. House of the Dead காட்டும் உலகம் குற்றவாளிகளின் உலகம். அதில் இருக்கும் அனைவருமே தக்களுக்கான சிறைவாழ்க்கையை வெளியுலகத்தைப் போன்றே இயல்பாக வாழ பழகியவர்கள். அங்கு பாவப்பட்டவர்கள் என்றோ துன்பப்படுகிறவர்கள் என்றோ யாரும் கிடையாது. வெளியில் இருந்து பார்க்கிற நமக்குத்தான் இந்த வேறுபாடுகள் அனைத்தும். சற்று உள்ளே நுழைந்து பார்த்தால் தான் தெரியும் வாழ்க்கை எவ்வளவு வெளியுலக வாழ்க்கையைப் போன்றே இயல்பானதாக இருக்கிறது என்று.
பிரச்சனை என்னவெனில் யாரும் உள்ளே சென்று பார்த்ததில்லை அவ்வளவுதான். சிறைவாழ்க்கையின் நிஜத்தின் உள்ளே பயணித்துப் பார்க்கும் போது மாத்திரமே அது எவ்வளவு இயல்பான வாழ்க்கை என்று தெரிய வரும். இருப்பினும் பார்க்கிறவன் அந்த நிஜத்திற்கு அப்பாற்ப்பட்டவன் தான். தாஸ்தாவஸ்கி உட்பட. அவனுக்கும் அந்த நிஜத்திற்கும் சம்பந்தமே கிடையாது. தாஸ்தாவஸ்கி சிறைச்சாலையில் போதுமான காலத்திற்கு தன் வாழ்க்கையை செலவிட்டவன். ஒருவேலை அவன் சிறைக்கு போகும் முன்பு அந்த வாழ்க்கையை ஒரு அந்நியப்பட்ட வாழ்க்கையாக பார்த்திருக்கக் கூடும். அந்த அனுபவத்திற்குப் பின்புதான் அவனுக்கு சிறை வாழ்க்கையின் இயல்புத்தன்மையைப் பற்றி புரிய வந்திருக்கும்.
செர்வான்டிஸ் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை போர்க்களங்களில், சிறைக்கயிதியாகவே செலவிட்டவன். அந்த அனுபவம் அவனுக்கு வாழ்க்கையைப் பற்றி, அரசியலைப் பற்றின ஒரு தெளிவான பார்வை தந்திருக்க வேண்டும். அரசாங்கத்தைப் பற்றியும் ஒரு புரிதல் இருந்திருக்க வேண்டும். அவைகள் அனைத்தும் டான் குயிக்ஸாட் என்ற நாவலை எழுத வைத்திருக்கிறது. அந்தப் புனைவின் மூலம் சமுகத்தை, அரசியலை எப்படி பகடி செய்வது எண்ணம் உருவாகியிருக்கக் கூடும்.
நாவலின் முதல் பாகம் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் எப்படி சமூகம் என்பது நம்மால் புரிந்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்பு என்றும் அதில் துன்பப் படுகிறவர்கள் ஒடுக்குகிறவர்கள் என்று தனித்தனியாக யாரும் கிடையாது என்றும் தெளிவாகக் காட்டியிருப்பார். ஒருவேளை செர்வாண்டிஸ் தன்னுடைய வாழ்நாளில் சிறைக்கைதியாக இல்லாதிருந்தால் இதனை ஒரு போதும்  உணர்ந்திருக்கவே மாட்டார்.
பன்னிரண்டு சிறைக்கைதிகளை கப்பலில் துடுப்பு இழுக்கும் படி அரசரால் தண்டனை பிறப்பிக்கப்படுகிறது. அவர்கள் காவலாளர்களால் பிணைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள். இதனை டான் குயிக்ஸாட் பார்த்துவிடுகிறான். அவனுடைய பணி கட்டுண்டவர்களை விடுவிப்பது. அதற்காகவே அவன் வீரத்திருமகனாக நியமிக்கப்பட்டிருக்கிறான்.
இதில் ராஜா கூட அவன் பணிக்கு குறுக்கிடையாக நிற்க முடியாது. யாருக்கும் அஞ்சாமல் பணியாற்றுகிறவன் டான் குயிக்ஸாட். இப்போது அரசராலேயே தண்டனை விதிக்கப்பட்ட பன்னிரண்டு பேரை கொண்டு செல்கிறார்கள். டான் குயிஸாட் அவர்களை விடுவிக்கும் பொருட்டு அவர்களிடன் உரையாடுகிறான். இந்த உரையாடல் அதி முக்கியம். இதுவரை கதைகள் குற்றவாளிகளை பேச வைத்ததே இல்லை. ஒன்று குற்றம் சாட்டப்படுவார்கள். இல்லையென்றால் யாரேனும் அவர்களுக்காக வாதிடுவார்கள். குற்றவாளிகள் இதுவரை பேசியதே இல்லை.
இந்த இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் குற்றவாளிகள் பேச அனுமதிக்கப்பட்டு தங்கள் குற்றத்திற்கான காரணங்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒருவன் கூட தான் செய்த குற்றத்தைப் பற்றிக் கவலைப் படவோ அதனை ஒப்புக்கொள்ளவோ இல்லை.  தான் என்ன செய்தேன் என்பதை முற்றிலுமாக மறைத்து விடுகிறான். அதற்கு மாறாக தான் ஏன் தண்டிக்கப்படுகிறேன் என்பற்கு தனக்கு பத்து பொற்காசுகள் இல்லை என்பதனால் தான் என்று கூறுகிறான். தன்னுடைய வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுப்பதற்கு பத்து பொற்காசுகள் இல்லை என்பதனால் தான் இந்த தண்டனை அனுபவிப்பதாகக் கூறுகிறான். உண்மையில் அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன் வர தயாராக இல்லை.
மற்றொருவன் தான் செய்த குற்றங்களையும் மற்ற அனுபவங்களையும் புத்தகமாக சிறையில் இருந்து எழுதியதாகவும். அதனை பணத்திற்கு சிறைக் காவலினடம் அடகு வைத்து விட்டதாகவும் கூறுகிறான். ஆக இவனும் தன்னுடைய குற்றத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலைகள் எல்லாம் எப்படித் தண்டனையில் இருந்து தப்புவது என்பதும் தப்பிக்க வழியில்லாது போனதுதான் அவர்களுடைய தண்டனைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களைக் காப்பாற்றவே தான் வீரத்திருமகனாக நியமிக்கப்பட்டதாகக் குயிக்ஸாட் நினைத்துக் கொள்கிறான். உண்மையில் அவர்களுக்கு அவன் அவசியமே இல்லை.  
காவலர்களின் கட்டுப்பாட்டிற்கு மீறி அவன் வலுக்கட்டாயமாக அவர்களை விடுதலை செய்து விடுகிறான். காவலர்கள் தாக்கப்படுகிறார்கள். தான் அவர்களை விடுவித்ததற்கு அவர்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டவர்கள் என்றும். நடந்ததை தன் காதலி டல்சினியாவிடம் போய் கூறும் படி கேட்கிறான். அதற்கு மாறாக அவர்கள் அவனை காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிடுகிறார்கள்.

பார்க்கப் போனால் கடைசியாக குயிக்ஸாட் ஒருவன் மாத்திரம் தான் நல்லவனாக இருக்கிறான். அரசன் முதல் சிறைக்கைதிகள் வரை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தீமையானவர்கள் தான். ஒருவேளை செர்வாண்டஸ் இதனை நேரடியாகக் பேசியிருந்தால் சுட்டெரிக்கப்பட்டிருப்பான். கதையின் மூலமாக கோமாளிக் குயிக்ஸாட்டின் மூலமாக தன்னுடைய ஆதங்கம் அனைத்தையும் தீர்த்துக் கொள்கிறான்.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...