Tuesday, November 22, 2016

குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம்



குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம்
இருபதாம் நூற்றாண்டு மிகவும் கொடூரமான நூற்றாண்டு. உலகப்போர்களைக் கண்ட நூற்றாண்டு அது. அதனிடம் திரும்பிச் செல்ல யாருமே விரும்ப மாட்டார்கள். படைப்பாளிகள் கூட அதனை அப்படியே தங்களுடைய கதைகளில் காட்சிப்படுத்தவில்லை. போர்களை காட்ட காதல் காவியங்கள் மாத்திரமே அதனை பேசுவதற்கு துணை நின்றன. நேரில் பார்த்து சகிக்ககூடாத யுகம் அது. அது தன்னை தற்போது கதைகள் மூலமாக நம்மை திருபத் திரும்ப நான் மீண்டும் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. நாமும் அது தரும் அச்சத்திலேயே நம்முடைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு எப்போது வெடித்தெழும்புமோ என்ற மெல்லியதான அச்சம் தேசிய/சர்வதேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் போது துளிர்க்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் அந்த அகோரமான நூற்றாண்டு நம்மிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.
அந்த நூற்றாண்டு திரும்ப எட்டிப்பார்க்காது என்று சற்று ஆசுவாசம் அடைகிற அந்தத்தருணத்திலேயே எதாகிலும் ஒரு வரலாற்றுச் சீற்றம் நம்மிடைய நடைபெற ஆரம்பித்து விடுகிறது. நாம் நிம்மதியடையக் கூடாது. அதுதான் அதனுடைய விருப்பம். சரி சற்று எச்சரிக்கையாக இருப்போம் என்று வரலாற்றை பயத்தோடு உற்றுப் பார்க்கும் போது நிசப்தமாக வரலாறு தெளிந்த நீரோடைப் போன்று பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. எதையும் தீர்க்கமாக கணிக்க முடியாத யுகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பழைய யூதர்களின் தீர்க்கதரிசிகள் இன்று இங்கு இருந்தாள் அவர்களே குழம்பிப் போய் விடுவார்கள்.
நம்முடைய யுகம் புயலுக்கு முன் அமைதியா அல்லது பின் அமைதியா என்று நம்மாள் கூற முடியவில்லை. ஆனாலும் நமக்கு இருபதாம் நூற்றாண்டு அதிக பயத்தை ஏற்படுத்திதான் விட்டது. அது தந்திருக்கிற பயத்திலேயே நாம் நம்முடைய காலக் கட்டத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை வால்டர் பெஞ்சமின் வரலாற்றுத் தூதன் என்ற சித்திரத்தின் மூலம் அதனை புரிந்து கொண்டிருப்பார். சித்திரம் இதுதான். வரலாற்றுத் தூதன் தன் பயணத்தில் தொடந்து பறந்துக் கொண்டே இருக்கிறான். வரலாற்றுத் தூதன் முன் நோக்கி பார்க்காமல் தன் பயணத்தை பின் நோக்கிப் பார்த்து பறந்துக் கொண்டிருப்பான். அப்படிப் பறக்கும் போது பார்வையில் ஒரு பீதி அவனுடைய முகத்தில் காணப்படும். வரலாறே தன்னுடைய பயணத்தைக் கண்டு அஞ்சிய யுகம் தான் இருபதாம் நூற்றாண்டு.
அதெல்லாம் இன்றைக்கு அப்படி இல்லை. வரலாற்றுத்தூதன் இன்றைக்கு தன்னுடைய பயணத்தை பீதியோடு பார்த்துக் கொண்டு பறந்து கொண்டிருக்க மாட்டான். இன்றைக்கு அவனுடைய பார்வை முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை வரலாற்றுத்தூதன் எப்படிப் பார்ப்பான் என்பதை சற்று மாற்றி வரைய வேண்டி இருக்கிறது. இன்றைய சூழலின் நிலைமையை பயத்தோடு அவன் பார்க்க மாட்டான். அவனுடைய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கும். இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்த ஒரு முகத்தைத் சித்தரிக்க வேண்டியிருக்கிறது.
இன்றைய வரலாற்றுத் தூதன் மண்டையை சொறிந்துக் கொண்டே பறக்கும் பறவையாக குழப்பத்தோடு பார்த்துக் கொண்டே பறந்து கொண்டிருப்பான். அதைப் பார்ப்பதற்கு நையாண்டித்தனமாகத்தான் இருக்கும். சீரியசான ஒரு ஓவியம் இன்றைக்கு முற்றிலும் நகைப்புக்குறிய சித்திரமாகத்தான் நமக்குத் தோற்றமளிக்கும். இன்றைய நம்முடைய வரலாறு அப்படிப்பட்டது. ஏன் இன்று நம் தேசியத்தின் வரலாற்றை எழுத முற்பட்டால் வரலாற்றாசிரியன் கூட குழம்பிப் போய் விடுவான்.  இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று யாராலும் கூற முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருடையப் பக்கம் நின்று வரலாற்றை எழுதுவது என்பதுதான் நம்முடைய இன்றைக்கான பிரச்சனையாக இருக்கிறது.
ஒருகாலத்தில் இடதுசாரிகள் சீர் குலைந்த சமூகத்திற்கான மனசாட்சியாக இருந்து வந்தனர். இப்போது அதுவும் கூட செயல் அற்று போன நிலையில் இருப்பதை நம் கண் முன் பார்க்கிறோம். இடதுசாரி என்பதுகூட ஒரு காலக்கட்டத்தின் செயல்பாடுதானோ என்று இப்போது யோசிக்கத்தோன்றுகிறது. இன்று இடதுசாரிகளின் இயக்கங்கள் காலாவதியான இயக்கங்கள் போன்று தோற்றமளிக்கின்றன. இந்நிலையில் நம்முடைய பிரச்சனையின் தீர்வுக்கு எங்கு நாம் போய் நிற்பது என்பதுதான் குழப்படியான நிலை. இந்த குழப்பத்தின் சிக்கள் முடிச்சுகளை அவிழ்ப்பதே முதலாவது மிகப்பெரிய வேலை. அதற்கும் மீறி சென்று பிரச்சனைக்கான தீர்வைக் காண்பது சாத்தியமற்றக் காரியம்தான்.

இன்றைக்கு எது நம் பிரச்சனை, எது நமது தேவைகள் என்பதே தெறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய காலகட்டம் குழப்படியின் காலகட்டமாக இருக்கிறது. இந்தச் சூழலில் நாம் மாத்திரம் அல்ல வரலாற்றுத் தூதனே இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் போக்கை தீர்மாணமாக இதுதான் என்று பின்நோக்கிப் பார்த்து பயப்படவோ அமைதிக் கொள்ளவோ மாட்டான். மண்டையைப் பிய்த்துக் கொண்டு பயணிக்க ஆரம்பிப்பான். நம்முடைய யுகம் பயப்படக் கூடிய ஒன்றாக இப்போது இல்லை. அது நகைப்புக்குரியதாகவும் இல்லை. இது புரிந்து கொள்ள முடியாத யுகம். முற்றிலும் அபத்தத்தின் யுகம். எவ்வளவு அதிகம் நாம் இதன் அருகில் கிட்ட நெருங்குகிறோமோ அவ்வளவுக்கதிகம் நாம் குழப்பமடைந்து விடுகிறோம். பயத்தின் அனுபவம் கூட ஒருவிதத்தில் பரவாயில்லை. நாம் யார் என்பதும், நம்முடைய சமுகம் இதுதான் என்பதும், இப்படிப்பட்ட கோட்பாடுதான் நம்மை வழிநடத்துகிறது என்பதும் நமக்கு புரியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய குழப்பத்திற்கான தீர்வை கண்டுபிடிப்பதே தற்காலிகத் தேவையாக இருக்கிறது. இந்தக் குழப்பத்தின் பிரச்சனைக்கு மீறிதான் நம்முடைய மற்ற எல்லாக் கேள்விகளின் தீர்வுகளும். அதுவரையில் ஒன்று நாம் இருபதாம் நூற்றாண்டின் தொடர்ச்சியில் பயத்தில் வாழ வேண்டும். அல்லது நாம் யார் என்பதன் அடையாளத்தின் தொலைப்பில் தேடலைத் தொடர வேண்டும். இவைகளே இப்போதைக்கான நம்முடைய தெரிந்தெடுப்புகள். 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...