Monday, November 14, 2016

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு
ஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.
ஜெயமோகன் தன் கதைகளை எப்படி வேறு ஒரு நாட்டின் நிலப்பரப்பை கதைக்களமாக உருவாக்கி அங்கிருந்து நம்முடைய பிரச்சனைகளை பேசுகிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது வெள்ளை யானை அயர்லாந்து தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும். கதையும் அயர்லாந்தின் எய்டனை நாயகனாக் கொண்டு அங்கிருந்து கதை நம் நாட்டிற்கு பயணிக்கும். நம்மைப் பற்றி அவர்களால் மாத்திரம் தான் பேச முடியுமா என்ன, நம்முடைய படைப்பாளிகளால் அவர்களை பேசு பொருளாக வைத்து ஆராய முடியாதா என்ன என்ற அகங்காரம் இந்த இரண்டு கதைகளை வாசித்த போது ஏற்பட்டது.
பிரச்சனை நம்முடைய பிரச்சனை. நம்மாலேயே ஜீரணிக்க முடியாத பிரச்சனை. மீறி பேசினால் எழுத்தாளனுக்கான சேதாரம் அதிகம். அவைகள் கெய்ஷா மூலமாக கொட்டித் தீர்க்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் படைப்பாளனின் அகங்காரம் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. அது எதனால் என்பது நமக்குத் தெரியாது. அதை படைப்பாளனும் வெளிப்படுத்தி பேசமாட்டான். அகங்காரம் ஏன் பாதிக்கப்பட்டது என்பதை எப்படி அவனால் கூற முடியும். அது அரசியல் சம்பந்தமாக இருக்கலாம். இலக்கிய சர்ச்சை சார்ந்ததாக இருக்கலாம். ஏதோ ஒருவிதத்தில் அகங்காரம் சேதமடைந்திருக்கிறது. அதனை ஈடுகட்டக்கூடிய ஒரே இடம் பெண்மை என்ற ஒரு புள்ளி மாத்திரமே. அதனை நம்மிடையே அவனால் ஈடுகட்டிக் கொள்ள முடியாது. நம்முடையது அல்லாது வேறொரு பெண்மை அவனுக்குத் தேவைப்படுகிறது. இதனாலேயே கதை ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டு கெய்ஷாவின் முன் தன் ஆணின் அகங்காரத்தை மீட்டெடுத்துக் கொள்கிறான். தன் அகங்காரம் எப்படி அந்தப் பெண்ணிடம் மீட்டெடுக்கப்பட முடியும் என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. ஆணின் அகங்காரம் அவனுடைய காமத்தில் நிலை கொண்டிருக்கிறது. அது ஒரு பெண்மையினால் மரியாதை செய்யப்பட வேண்டியிருக்கிறது. அது சாத்தியப்படுவது நிச்சயம் காமத்தை கலை நயத்துடன் அதன் ஆணின் இருப்பு நிலையை பார்க்க வைக்கக்கூடிய இந்த கெய்ஷாக்களால் மாத்திரமே.
ஆணின் காமத்தில் ஒடுங்கி இருக்கும் அகங்காரம் மிருகத்தனமானது. ஜப்பானிய அரசர்கள் அந்த மிருகத்தைக் கொண்டு அநேக பெண்களை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். அதாவது எந்த பெண்மையும் அந்த அரசர்களின் அகங்காரத்தை மதிப்புக் கொடுத்து அதனுடைய இருப்பை மரியாதை செய்யவில்லை. ரஷ்ய மந்திரக் கதைகளில் வரும் Beauty and the Beast போன்று அதன் மிருகத்தனம் மீண்டும் அதனுடைய ஆண் என்ற நிலைக்குக் கொண்டுவராமல் மிருகமாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பெண்மையின் நிலை மாத்திரமே அதனை தன் உண்மை நிலைக்குக் கொண்டுவர முடியும்.
இந்தக் கெய்ஷாக்கள் காமத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று கலையாகக் கற்றறிந்தவர்கள். அவர்கள் அரசர்களை அவர்களுடைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மனிதர்களாக்கி இருக்கின்றனர். கதையில் வரும் பத்திரிக்கையாளன் இந்தக் கெய்ஷாவிடம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஜப்பானியப் பெண்ணுடன் ஓர் இரவு தங்கப் போகிறான். அவள் கெய்ஷா அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கெய்ஷா இலக்கியம் படிக்கும் பெண். நகர வாழ்க்கைக்கு போதுமான பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட இந்தத் தொழில் அவளுக்கு அவசியப்பட்டிருக்கிறது.
அவள் கெய்ஷா இல்லை என்பது தெரிந்திருந்தும், கெய்ஷா என்ற பெயரிலேயே அந்தப் பெண் அவனுக்கு அவசியப்பட்டவளாய் இருக்கிறாள். அவள் மாத்திரமே அவனுடைய தொலைந்து போன அசட்டை செய்யப்பட்ட அகங்காரத்தை மீட்டெடுக்கக் கூடியவள். கெய்ஷா என்ற பெண்ணிடம் அவன் கண்டடைவது அவனுடைய உண்மையான ஆண் என்ற முகத்தை. அது ஏதோ ஒரு விதத்தில் யாராலோ சிதைக்கப்பட்டிருகிறது. அல்லது தொலைக்கப்பட்டிருக்கிறது. தான் ஒரு பத்திரிக்கையாளன் புத்தகங்களை எழுதியிருக்கிறவன் என்ற இன்னும் பல தொலைக்கப்பட்ட தன்னுடைய முகத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அதனை நிச்சயம் ஒரு கெய்ஷாவால் மாத்திரமே மீட்டுத் தர முடியும். அவளுடைய இலக்கியப் பின்புலம் ஒருவாறு அவன் பேசும் புரிதலற்ற மொழியை புரிந்து கொள்ளச் செய்கிறது. மேலும் தான் கெய்ஷா அல்ல என்பதையும் அவள் கூறிவிடுகிறாள். அவர்கள் மத்தியில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது.
தன்னை அவன் முழுவதுமாக கண்டடைந்த ஒரு இடம் அந்தக் கெய்ஷா என்கிற பெண்மையிடம் மாத்திரமே. அவள் பிறப்பால் கெய்ஷாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கெய்ஷாவுக்கான தன் காமத்தின் கலையை நன்றாக அவனிடம் பிரயோகித்து விட்டாள். அதன் முழுமையில் அவனை அவள் முழுவதுமாக மீட்டெடுத்து விட்டாள்.
படைப்பாளிகள் தங்கள் சிதைக்கப்பட்ட முகத்தை அல்லது ஏதோ ஒரு குழப்படியில் தொலைத்து விட்ட முகத்தை கண்டடையும் இடம் இது போன்ற கதைகள் தான். இங்கே கதைகள் காமத்தில் உறைந்து விடுகின்றன. இந்த உறைபனி நிலையில் முழுவதுமாக கதைகூட எந்தவித ஓட்டமும் இன்றி ஒரே இடத்தில் உறைந்து விடுகிறது. இது போன்ற உறைந்த நிலையை நாம் Milan Kundera வின் கதைகளில் வாசிக்க முடியும். முக்கியமாக அவருடைய The Unbearable Lightness Of Being என்ற நாவலில் நாம் வாசிக்க முடியும்.
கதையில் நாகனின் இடையறாது பெண்களின் தேடல் தன்னுடைய தொலைந்து போன சுயத்தைத் பற்றியத் தேடலாகவே இருக்கும். அவன் தேடிய பெண்களின் எண்ணிக்கை கதை இருநூறு என்று பட்டியலிடும். இது வெறுமனே யதார்த்தக் கதைதானா? நிச்சயம் இருக்கவே முடியாது. கெய்ஷா என்பது உருவக நிலை. அங்கு ஒரு பெண்மை சித்தரிக்கப்படுகிறது. அதனை பெண் என்று மேலோட்டமாக கூறிவிட முடியாது. கதையே ஒரு உருவகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அதில் நடைபெறுவது வெறுமனே கதையாடல் மாத்திரம் அல்ல. கதை என்பது படைப்பாளி தன்னுடைய உள்ளக் குமுறலை வெளியேற்றும் சாதனம் அவ்வளவே. இதில் படைப்பாளிகள் பாக்கியசாலிகள். அவர்கள் தங்களில் இருக்கும் எல்லா குமுறல்கள் வேதனைகள் பொறாமைகள் எல்லாவற்றையும் மொழியின் மூலமாக வெளியேற்றி விடுகிறார்கள். இன்னும் அவைகளின் தீவிரம் அதிகரிக்கும் போது மொழி வெறுமனே மொழியின் நிலையில் நில்லாது கதைக்கான கதையாடலாக மாறிவிடுகிறது.
கதையின் மூலம் கிடைக்கப்பெறுகிற உண்மை என்ன என்பது ஆராய முடியாதது. அது படைப்பாளனின் உள்மனதின் எரிமலைச் சிதறளின் இரகசியம். அவனுக்கே கூட அதன் சுபாவம் தெரியாது. எனினும் வாசிப்புக்கு நல்ல கதை நமக்குக் கிடைக்கிறது. கெய்ஷாவின் நாயகன் ஏறக்குறைய மிலன் குண்டேராவின் The Unbearable Lightness Of Being கதையின் நாயகனைப் போன்று தான் தொலைத்த அகங்காரத்தை பாரிசில் தேடியது போன்று இங்கு ஜப்பானிய தேசத்திற்கு வந்து தேடுகிறான்.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...