Monday, October 31, 2016

Wish You The Same

Wish You The Same
ஆங்கிலத்தில் ஒருவர் நமக்கு வாழ்த்து கூறும் போது அதற்கு மறு வாழ்த்து கூறுவது சங்கடமான காரியம். ”Wish You Happy Diwali Sir”. மறுவாழ்த்து கூற தமிழில் இருந்து அப்படியே மொழிப் பெயர்ப்பு செய்தால் ஊர் சிரித்துவிடும். அதற்காக மௌனம் காக்கவும் முடியாது. எதையாகிலும் உளறி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான். நாம் எவ்வளவு ஆங்கிலத்தில் உலக இலக்கியத்தை வாசித்திருந்தாலும் அந்த ஒரு நொடிப் பொழுதில் நம்முடைய எல்லா வாசிப்பனுபவமும் பூஜ்ஜியமாகி விடுகிறது. மறுவாழ்த்து சொல்ல கற்றுத்தராத  இலக்கியம் என்ன பெரிய இலக்கியம் என்ற ஆற்றாமை அப்போது நாம் வாசித்த வாசிப்புகள் அனைத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் நவீனத்தின் மிடுக்கோடு இருக்கிற மாணவர்களைக் கண்டால் போதும் நம்முடைய ஆங்கிலத்தில் இருக்கிற “do” “does” ஆகிவிடும் “does” “do” ஆகிவிடும்.
பாடம் நடத்த விட்டால் மாத்திரம் போதும் நாம் தான் ஷேக்ஸ்பியர் நாம் தான் சர்ச்சில். நமது ஆங்கிலத்தை மற்றவர்கள் மெச்சுகிறார்களோ இல்லையோ நம்மளவில் நாம் தான் சிறந்தவர்கள். அந்த மேடையை விட்டு இறங்கி விட்டால் போதும் நம்முடைய ஆங்கிலப் புலமை அனைத்தும் நீராவிபோல் காணாமல் போய் விடும். நம்முடைய சர்வாதிகாரம் ஒன்றும் அங்கே செல்லுபடியாகாது. இதனால் தான் என்னவோ பெராசிரியர்கள் மைதானத்தில் மாணவர்களை பார்த்தால் அதிகாரத் தோரணையில் நடக்க ஆரம்பிப்பார்கள். ஒருவனாவது வாழ்த்துக் கூறத் துணிவான் என்று நினைக்கிறீர்கள். அந்த மிடுக்கை நான் ஓரளவிற்காவது கட்டிக் காத்திருக்க வேண்டும். அனைத்தும் பாழாகிவிட்டது. மேடையில் என்ன பேசி என்ன பயன். அதை மைதானத்தில் சரிசமமாக உரையாடுவதற்கு நான் கற்ற ஆங்கிலம் உதவிக்கு வரவில்லையே. “Wish You Happy Diwali Sir”. என்ன பதில் சொல்லுவது. “Thank You” என்று ஊர்புற மாணவர்களிடம் சொல்லி சமாளித்து விடலாம். மேட்டுக்குடி மாணவர்களிடம் சிக்கினால் அவ்வளவுதான். அந்த ஒரு தவறு வருடத்தின் இறுதியில் ஆரிசியரின் Performance Reportல் காட்டிவிடும். மாணவர்கள் ஆசிரியரின் ஆங்கில புலைமைக்கு தரும் மதிப்பெண் அவரை கல்லூரி முதல்வரின் அலுவலக அறை வரை இழுத்து விடும். இதில் என்ன ஜோக் என்றால் அந்த முதல்வரிடம் நாம் ஆங்கிலத்தில் வாங்கும் வசவு இருக்கிறதே அப்படியே வடிவேலின் ஆங்கிலம் தான். ஸ்டைல் தான் அதில் இருக்காது. மற்றபடி இலக்கணம் தவறாத ஆங்கிலம். வடிவேலுவின் ஆங்கிலமும் இலக்கணம் தவறாத ஆங்கிலம் என்பதை கண்டிப்பாக நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அவரும் நம்மைப் போன்றவர்தானே. அதற்காக நம்மை விட்டுவிடுவாரா என்ன. ஆனால் பாருங்கள் அவர் தான் கற்றுக் கொண்ட இரகசியத்தை சொல்லித் தரவே மாட்டார். பட்டறிவும் வசவுகளும் தான் நம்முடைய மிகப்பெரிய குருமார்கள். அவர்களை நம்பித்தான் நம்முடைய அறிவுத் தேடலும் அதன் வளர்ச்சியும் இருக்கிறது. சொல்லித் தந்துவிட்டால் அனைத்தும் குறைந்து விடுமல்லவா. இவர்கள் வள்ளுவரின் குறளுக்கு மாற்றுக்கருத்து உருவாக்கும் மேதைகள். அந்த வள்ளுவனுக்கு தொட்டனைத்தூறும் மணற்கேணி நம்முடையவர்களுக்கோ தொட்டாலே கட்டாந்தரையாகிவிடும் என்ற அச்சம். பட்டறிவும் அசிங்கங்களும் கற்றுதரட்டும் என்று விட்டுவிடுகிறவர்கள்.
அப்படி இருந்தும் இந்த இரட்டிப்பான அசிங்கங்கள்  ஆசிரியருக்கு கொஞ்சம் அதிகம் தான். அப்படி ஒன்றும் பெரிய தவறு இல்லை. அவர்கள் வாழ்த்திய வாழ்த்துக்கு மறு வாழ்த்து சொல்லவில்லை அவ்வளவுதான். Thanks என்று எத்தனை முறை சொல்லுவது. கடைசியாக ஒரு மாணவி மாத்திரம் அக்கறை கொண்ட அதிகாரத் தொணியில் சார், Wish You The Same ன்னு சொல்லுங்க என்று அதட்டினாள். அன்று அதை அப்படியே பிடித்துக் கொண்டேன். கற்றுக் கொள்வதில் என் மூளை கற்பூர மூளையாக்கும். அதற்கு இனை ஒன்றும் கிடையாது.
இப்போது அதிகம் கிராமப் புற மாணவர்கள் தான் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்த்தும் போதெல்லாம் அந்த மறு வாழ்த்தை தவறாமல் சொல்லிவிடுகின்றேன். என்றாலும் பாருங்கள் அவர்கள் அந்த மறுவாழ்தை எதிர்ப்பார்ப்பதே இல்லை. ஒரு Thanks அவ்வளவுதான். அவர்களுக்கும் மகிழ்ச்சி நமக்கும் அதைப் பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை. எனினும் அந்த Wish You The Same நன்றாக பதிந்து விட்டது. இப்போது யார் வாழ்த்தினாலும் நான் தவறாமல் அந்த மறு வாழ்த்தை சொல்லி விடுகிறேன்.
அந்த மறுவாழ்த்தை சொல்லும் போது ஒரு செயற்கைத் தனம் என்னில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு வேளை அது மேட்டுக் குடி மாணவர்களிடம் இயற்கையானதாக இருக்கலாம். இருந்தாலும் இனிமேல் இடம் பார்த்து பழக வேண்டும். இடம் பார்த்து பேச வேண்டும். இடத்துக்கு இடம் ஒரு மொழி. அது புரிந்தால் ஆசிரியர் வேலை மிக இனிமையாகிவிடுகிறது. இல்லையென்றால் மாணவர்கள் மீது வீண் கோபம். கல்லூரி நிர்வாகத்தின் மீது தீராத வெறுப்பு. இதையெல்லாம் தவிர்க்க மிடுக்கோடு தலையை ஆட்டிக் கொண்டே மைதானத்தில் நடக்கலாம். மாணவர்களும் நமக்கு வேண்டிய மரியாதையை தந்து விட்டு பின் புறம் சென்று பட்ட பெயரை கொண்டு வாய்க்கு வந்ததை சொல்லி திட்டிவிடுவார்கள். அதற்கு அசிங்கப் பட்டு மாணவர்களிடமே கற்றுக் கொள்வது மிக நல்லது.  





No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...