Wednesday, October 19, 2016

கதைக்கதையாம் காரணமாம்


கதைக்கதையாம் காரணமாம்
கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும். அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல் நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும் ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான் இருக்க முடியும்.
அது போன்ற மனிதர்கள் மொழியை சரலமாக கொண்டு செல்லும் திறமையில் அசாதாரணசாலிகளாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் சற்று இயல்புக்கு மீறினவர்களாகவே இருக்க செய்கிறார்கள். அருகில் சென்று குறைந்தது பதினைந்து நிமிடத்திற்கு மேல் நேரம் செலவிட்டால் அவர்கள் இயல்புக்கு மிறின ஒரு பைத்திய நிலையில் இருப்பவர்கள் என்பது மிகத்தெளிவாகி விடும். டிரைடன் இதனை தன்னுடைய அப்சலோம் அகித்தோஃபேல் என்ற வீர காவியத்தில் ”சொல்லாற்றலுக்கும் பைத்தியத்தின் நிலைக்கும் இடையில் மயிரிழை இடைவெளிதான்” என்று மிக அழகாக விளக்குவார். மிதமிஞ்சிய சொல்லாற்றலின் நிலையை அதாவது கட்டுக்கடங்காத நிலையை பயித்தியத்தின் நிலை எனலாம். அது எப்போது வேண்டுமானாலும் இந்த மையிரிழை இடைவெளியில் இருந்து மீறி செல்லக்கூடும். எனினும் அதிகம் கொண்டாடப்படுவது அந்த நிலைதான். அதுவாகவே மாறவேண்டும் என்ற ஆவல் எப்போதும் மனிதர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அது மிகவும் ஆபத்தான நிலை.
இயல்பு நிலை என்பது மந்த நிலை. யார் அதிகம் மந்தமாக காரியக்களை மிகத் தாமதமாக உள்வாங்குகிறார்களோ வெளிக்கொணர்கிறார்களோ அவர்களே அரோக்கியக்கியமானவர்கள். அதற்காக அது உணர்வுகள் அற்ற மனம் என்பதல்ல. சொல்லாற்றலின் நிலைக்கு எதிர் நிலை உணர்வுகளே இல்லாத மனம், பேதமையின் நிலை. சொல்லப்போனால் மக்கு சூன்யத்தின் நிலை. அப்படிப்பட்டவர்கள் உணர்வுகளை சவுக்கடிதான் உயிர்ப்பிக்கும். அவர்களுக்கு சொரனை பிறப்பதே சௌக்கடியின் மூலம் தான். இருப்பினும் மந்தத்தின் நிலைமை மிக இயல்பாக யாவருக்கும் அமையக்கூடிய ஒன்றாகும். இதில் இயல்பிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் பேச்சாற்றல் காரர்களும் பேதைகளுமே.
இயல்பு நிலை மனிதர்களின் மொழிதான் மிகவும் முக்கியமானது அதுவும் கவனிக்கத்தக்கது. இந்த மொழி முழுவதும் சொல்லாற்றலைக் கொண்டு செயல்படுவது அல்ல. இது முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒன்றாகும். கருத்துக்கள் தாம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கருத்துக்களுக்கு வார்த்தைகளை உருவாக்குவதுதான் இவர்களின் மிகப்பெறிய போராட்டம். வார்த்தைகளின் நிலை இரண்டாம் பட்சமாக போய்விடுகிறது. உதாரணத்திற்கு கடைதெருவில் சற்று நேரம் அமைதியாக மனிதர்களின் உரையாடல் சத்ததை கேட்டால் அதில் குறைந்தது பத்து பதினைந்து கதைகளும் மேற்கோள்களும் இடம் பெற்றுவிடும். அவர்கள் மொழியற்றவர்கள் எனினும் கருத்தாக்கத்தில் மிகப் பெறிய படைப்பாளிகளுக்கு இணையானவர்கள். அப்படிப்பட்டவர்களின் மத்தியில் இருந்து தப்பி சென்று நாடகக் அரங்க குதிரை லாயத்தில் ‘எடுபுடி’ வேலைப் பார்த்தவன்தான் இன்று உலகம் அறிந்த மேதை ஷேக்‌ஸ்பியர். நம்ம ஊர் குப்பன் சுப்பனைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள் ஷேக்‌ஸ்பியர் யார் என்று. ஏன் அவரது கதைகளை கூட மிக அத்துப்படியாக அறிந்திருப்பார்கள். கதைகளை அவர்கள் அறிந்திருப்பது வெறுமனே அதன் சுவாரசியத்திற்காக மாத்திரம் அல்ல. மாறாக ஒரு கருத்தை மற்றவர்களுக்கு மிகத்தெளிவாக பரிமாறிக்கொள்ள பயன்படுத்துகிறவர்கள். இவர்களே மிகப் பெரிய ஞானிகள். ஷேக்‌ஸ்பியரின் கதைகளை அதன் பிரதியில் படித்து அறிந்தவர்கள் அல்ல இவர்கள். வெறும் வாய் வழிக் கதைகள் தாம் அவைகள்.
பிரதிவழிக்கதைகள் உருவம் மாறாமல் இருப்பவைகள். அதுவே வாய்வழி வழக்கில் செல்லும் போது அது தன் ஆதி வடிவத்தில் தன்னை வைத்துக் கொள்ளாமல் தொடந்து தன்னை உருமாற்றிக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் கதைகள் அவைகளின் சுவாரசியத்திற்காக பரிமாற்றிக் கொள்ளபடுவதில்லை. மாறாக அவைகள் கருத்தாக்கங்களின் தெவைக்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன.
உதாரணத்திற்கு ஜூலியஸ் சீசர் கதையில் வரும் முக்கிய பகுதி அதிகம் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இடம் பெறும் பகுதி. சீசரை கொல்ல செனட்டிற்கு அழைத்து வர ஆள் அனுப்புவார்கள். சீசரின் மனைவி தான் ஒரு கெட்ட கனவு கண்டதாகவும் சீசர் செனட்டிற்கு போகக் கூடாது என்றும் கெஞ்சுவாள். இந்த ஒரு பகுதி பேச்சு பரப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பகுதி. இதனை அநேகர் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வார்கள். சில இடங்களில் சீசரை செனட்டிற்கு அவனுடைய மனைவியின் கெஞ்சல்களுக்கும் மீறி அழைத்து செல்ல அவர்கள் அவனை பெண்ணிற்கு பின்னால் ஒளிந்து கொள்பவன் என்று சீண்டி பார்த்து அழைத்து செல்வார்கள் என்றும். சில இடக்களில் சீசர் இன்னும் ஒரு நல்ல கனவுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியும் அவனை செனட்டிற்கு அழைக்க தூண்டிவிடுவார்கள் என்றும் சொல்லப்படும். ஒரு கருத்தை விளக்க அதன் தன்மைக்கேற்றவாறு கதைகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இருப்பினும் ஒரு கதை தேவைக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னில் இருந்து மக்களால் இன்னுமொரு முறை கதை கட்டப்படுகின்றது எனபதுதான் மிக ஆச்சரியமான காரியம். சில இடங்களில் இலக்கியத் துரையே அல்லாத மாணவர்கள் கூட “அவன் செல்பிஷ் ஜெயன்ட்டுட” என்று சொல்வார்கள். அதனை சொல்வதற்கு முன்பதாக அவர்களுக்கு அந்தக் கதையின் ஆழ்ந்த உள்ளர்த்தம் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த விதத்தில் எத்தனை பழமொழிகள் மரபுத்தொடர்கள் அன்றாட புழக்கத்தில் இடம் பெறுகின்றன என்பதை அந்த சூழலில் இருந்து சற்று கூர்மையாக கவனிக்கும் போதுதான் நமக்கு அறியவருகின்றன். இவைகளின் உதவியே இல்லாமல் ஒருவன் மொழியை பயன்படுத்தினால் நிச்சயம் அவன் பைத்தியத்திற்கு மிக அருகில் இருப்பவன்தான். எனினும் பெரும்பான்மையில் மொழி சாத்தியப்படுவது கதைகளின் உதவிக்கொண்டே ஆகும். மொழி தன்னில் தானே இயக்குவதற்கு திறன் அற்றது. கதைகளே இன்னும் சொல்லப்போனால் கதைகளை சொல்ல துடிக்கும் பேராவலே மொழியை இருந்தலின் நிலைக்கு சாத்தியப்படுத்துகிறது.
 


 


   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...