Monday, October 24, 2016

பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்


பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்
பாப் டிலன் நொபேல் பரிசைப் பெற்றது பலதரப்பு சிந்தனையாளர்களிடம் இருந்து பலவிதமான கருத்துக்களை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றன. சர்ச்சை என்று சொல்லாமல் கருத்துக்கள் என்று சொல்லவே பிரியப்படுகிறேன். பாப் டிலனின் இந்த தருணம் மிக முக்கியமான தருணம். நமக்கு மூன்று தரப்பினர்களின் விவாதங்கள் முக்கியப்படுகின்றன. இம்மூன்றைத் தவிர்த்து மற்ற எந்த விவாதமும் சர்ச்சைகளாத்தான் கொள்கிறேன். மூவர்கள் முறையே; நாட்டுப்புறவியல் வல்லுனர், சமூக சிந்தனையாளர் மற்றும் தேர்ந்த இலக்கியவாதி இலக்கிய விமர்சகர். இவர்களின் பெயர்கள் எனக்கு மாத்திரமே இரகசியமானவைகள். அதை வெளிப்படுத்தி இப்போது பேசுவது அறமாகாது. எனினும் இவர்களின் நிலைப்பாடுகளை முன் நிறுத்தி பேசுவது மிகவும் அவசியப்படுகிறது. இவர்கள் ஐரோப்பியர்களோ அல்லது கீழைத்தேயத்து அறிஞர்களோ அல்ல. நம்முடைய தமிழர்கள் அதுவும் பச்சைத் தமிழர்கள்.
பாப் டிலனின் இந்த உண்ணத நிலை இலக்கியத்திற்கு வாய்மொழிப் பாடல் விடும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எழுத்து வடிவம் தன் அழகியலை இழந்து சாரமற்று போய் நிற்கின்ற அவல நிலையில் பாப் டிலனை வேறு வழி இன்றி தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. எழுத்து தன்னில் தானே உயிர் அற்ற ஒரு நிலை. தன்னில் தானே அது ஒரு போதும் உயிர் தன்னமையைக் கொண்டிருப்பது என்பது முடியாத காரியம். எனினும் எழுத்து இல்லாமல் சிந்தனை இல்லை. எழுத்து ஏதோ ஒரு விதத்தில் தன்னுடைய அழிக்கப்பட முடியாத இருத்தலை நிலைநிறுத்திக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் வாய் மொழி எப்போதும் அதற்கு போட்டியாக தான் இல்லாவிட்டால் எழுத்திற்கான உயிர் நிலை இல்லை என சவால் விட்டுக் கொண்டே வருகிறது. எனினும் ஏதோ ஒரு இடத்திதில் இவைகள் இரண்டும் ஒன்று படும் போது வாழ்க்கையைப் பற்றிய புரிதல் எழுத்தின் மூலம் உன்னதப்படுகிறது. இந்தத் தருணத்தில் தங்களை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் தான் ரஷ்ய மேதைகள் குறிப்பாக டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும். இவர்களை மீறி எந்தப் படைப்பாளனையும் மிக உண்ணதமானவர்கள் என்று வாதிட்டு வெற்றிபெறலாம். ஆனால் காலம் இவர்களைமாத்திரம்தான் ஞாபகத்தில் வைத்திருக்கும். பேச்சுமொழியின் குரல்தான் இவர்களுடைய பிரதிகளை இன்னும் தொடந்து அதிகமான மொழிப்புகளைக் கோரிக்கொண்டே இருக்க செய்கின்றன. இங்கு எழுத்தில் இருக்கும் பேச்சின் குரல் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. புதிய மொழி பெயர்ப்பு என்பது பேச்சுக் குரலுக்கான ஒரு எழுத்து வடிவம். அதே நேரத்தில் அந்த பேச்சுக்குரல் தனித்தது அல்ல அது ஏற்கனவே எழுத்தோடு உயிரோடு உடம்பென உயிர்மெய்யாய் கலந்து விட்ட ஒன்று. தற்போது மொழி பெயர்ப்பில் நிகழ்வது எல்லாம் அழியாத அந்த உயிருக்கான ஒரு புதிய உடல். இல்லையெனில் நூற்றாண்டுக்கு ஒருமுறை மொழியின் மாற்றத்திற்கேற்ப மொழிபெயர்ப்புகள் இன்னும் இந்த இரண்டு இலக்கிய மேதைகளுக்கு அவசியப்படாது.
இந்தவகையில் உயிர் அறுபட்ட எழுத்தின் அவலநிலை நாட்டுபுறவியலாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாய் இருக்கிறது. பாப் டிலனை இவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். நாட்டுப்புற பாடல்களை வார்த்தைப் படுத்துவது முடியாத காரியம். அவைகள் வாய்மொழியிலேயே என்றென்றைக்கும் தங்களை புத்துயிர்ப்போடு பாதுகாத்துக் கொண்டு வருகின்றன. இவைகளை காப்பாற்ற யாரும் அவசியமில்லை. வாய்மொழி பாடலை எழுத்தில் பிணைக்கும் போது இரண்டும் ஒட்டாத நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் அமைதியாகி விடுகின்றன. சொல்லும் எழுத்தும் எதிர்முனையில் நின்றுவிடுகின்றன. பாப் டிலனின் இந்த வெற்றி நாட்டுப்புறவியலாலர்களின் கொண்டாட்டத்தின் தருணம்.  சொல் ஆதிக்கம் பெறுகிறது.
இதற்கு எதிரிடையில் நிற்பவர்கள் எழுத்தாளர்கள். படிப்பாளிகள் என்று இவர்களை சொல்லமுடியாது. எனினும் எழுத்தில் இவர்களுடைய முழுப் போராட்டமும் படைப்பு நிலையை நோக்கி தான் இருக்கின்றது. இவர்களுடைய பிடிவாதம் முழுவதும் எழுத்தின் மீது இருக்கும் பிடிப்பின் மேல் இருக்கிறது. சொல்லும் சொல்லை வார்த்தைக்குள் கொண்டுவராதவரை இவர்களுடைய படைப்புக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களுடைய ஆதங்கம் அனைத்தும் சொல் முதன்மைப்பட்டு எழுத்து இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டதே என்பதுதான். எழுத்து தன்னில் தானே சொல்லை தனக்கு உருவாக்கிக் கொள்ள முடியாது. இப்படிப் புலம்பும் எழுத்தாளர்கள் படைப்பாளிகளா என்றால் அதுதான் இல்லை. இவர்கள் நல்ல சுவாரசியமான கதைகளை எழுதக் கூடியவர்கள். மிஞ்சிப் போனால் இவர்களால் காதலுக்கு பதிலாக காமத்தைத்தான் தங்களுடைய கதைகளில் பதிவு செய்ய முடியும்.
இதில் இலக்கியம் என்பது எங்கே நிற்கிறது என்பதுதான் கேள்வி. வெறுமனே எழுத்தின் நேர்த்தியான நிலை தன்னை இலக்கியப் படைப்பு என்று மேன்மைப் படுத்திக் கொண்டால் அது இலக்கியத்திற்கான துரோகம். சரி, எப்போது எழுத்து படைப்பாகிறது என்று கேட்டால் சொல்லின் உயிர்நிலையின் சேர்க்கைதான் என்று சொல்லலாம். அதுகூட சரியான வரையறை அல்ல. காதல் கவிதைகள் அதை செய்துவிடுகின்றன. சமுகம் என்பதுதான் மிக முக்கியமான அம்சம் அது மூன்றாவதாக முன்பு சொல்லப்பட்டவர்களின் மத்தியில் சேர்க்கப்பட வேண்டியிருக்கிறது. சமுகம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்றாவதாக முழுமையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் சில படைப்புகள் பரிசுகளை தங்களுடைய அதீத சமூக அக்கறையினால் தட்டிசென்று விடுகின்றன. வெற்று யதார்த்தவாதக் கதைகள் தங்களுடைய சர்வாதிகார குரலை உயர்த்தி “அடி வாங்கினவன் நான் அதனால பரிசு எனக்கு தான் சொந்தம்” என்று பரிசுகளை பறித்து சென்று விடுகின்றன. சமூக அக்கறையைக் காட்டும் எந்தக் குரலுக்கும் எதிர்க்குரல்கள் ஒருபோதும் இருந்தது கிடையாது. அதனுடை புரட்சி எல்லாம் மொழியாவது அழகியலாவது அவைகளெல்லாம் வெற்று சவடால்கள் என்பதே. அப்படியே சமுகம், தான் இருப்பது போலவே படைப்பில் காட்டப்பட வேண்டும். மொழி, அழகியல். அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது.
எழுத்து, சொல், சமூகம் இவைகள் மூன்றும் ஒன்று சேர்ந்து சமச்சீர் விகிதத்தில் நிற்க்கும் போதுதான் மானுடம் என்ற உலகப் பொதுநிலை பிரதியில் படைப்பாகிறது. இவைகள் ஒன்று சேரவில்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கான படைப்பாளி இல்லை என்றுதான் அர்த்தம். எழுதுகிறவர்கள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் படைப்பாளிகளின் பிறப்பு தான் அரிதான தருணங்கள். படைப்பாளிகள் உருவாகும் போது பரிசுகள் மரியாதையடைகின்றன. பரிசளிக்கப்படுவதற்காக படைப்பாளிகள் பிறக்க வேண்டும் என்பது அசட்டுத்தனம். இப்படி படைப்பாளிகள் இல்லாத நேரக்களில் உயிர்நிலைக் கொண்டு நிற்பது வாய்மொழிப்பாடல்கள் மாத்திரமே. அதற்காக வாய்மொழிப்பாடல்கள் இலக்கிய அந்தஸ்த்தைக் கோரக்கூடாது. எழுத்தும் சண்டைக்கு வரக்கூடாது. சொல்லப்போனால் எழுத்து ஒரு உயிர் அற்ற வடிவ நிலை அவ்வளவுதான். உயிரும் வாழ்க்கையும் வந்து சேரும் வரை எழுத்து காத்திருந்துதான் ஆக வேண்டும். ஆனால் நொபேல் பரிசு காத்திருக்காது. கமிட்டியும் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த நிலையில் பாப் டிலன் இன்றியமையாதவராக்கிவிடுகிறார்.
ஆக, இம்மூன்று சிந்தனையாளர்கள் பாப் டிலனை கொண்டாடிக் கொள்வதும் சாடிக் கொள்வதும் அவர் அவர்களின் நிலைப்பாட்டைப் பொருத்தது. நமக்கு வேண்டியதெல்லாம் இவர்கள் தங்கள் கருந்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதனடிப்படையில் நான்காவதாக நாம் ஒன்றை கண்டடைந்திருக்கொறோம். கண்டுபிடிப்புக்கு ஆதாரமானவர்கள் இம்மூவரே என்பதுதான் தற்போது முக்கியப்படுகிறது.







No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...