Thursday, September 8, 2016





புனித வில்லியின் மன்றாட்டு: கோமாளிகளின் கலகக் குரல்
ஸ்காட்லாந்து கவிஞர் ராப்ர்ட் பர்ன்ஸ் ஆங்கில கவிஞர்களிலேயே மிக முக்கியமான கவிஞர். முதலில் ஆங்கிலக் கவி/எழுத்தாளர் இன்னார் என்பதை வரையறுப்பதே சற்று குழப்படியான வேலை. அவர் ஆங்கிலத்தில் எழுதியதாலேயே அவரை ஆங்கிலக் கவி என்று வைத்துக்கொள்வோம். மற்றபடி அவர் ஸ்காட்லாந்து கவி. இவர் மிகச் சிறந்த கவி என்பதை நிரூபிக்க மற்றொரு ஆங்கிலேயக் கவி மேத்திவ் அர்னால்ட் ”Study of Poetry”ல் Touch Stone முறையை பயன்படுத்துவார். எல்லாருடைய கவிதைகளையும் இந்த முறைமையில் பரிசீலித்து கடைசியில் ராபர்ட் பர்ன்ஸே சிறந்த கவி என்று நிரூபிப்பார். இந்த விமர்சன கட்டுரையைப் பேராசிரியர் ரெஜானி 2008ம் ஆண்டு எங்களுக்குப் பாடமாக நடத்தினார். அவர் நடத்திய ஒவ்வொரு வரியும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. மறுபரிசீலனை செய்யும் வண்ணமாக ரமணன் சார் பர்ன்ஸின் புனித வில்லியின் மன்றாட்டு என்ற கவிதையைத் தற்போதைய மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ரெஜானி எப்போதும் மிகப் பெரிய அறிவுத்தொகுதியில் இருந்து நம்பிக்கையே இல்லாமல் ஒரு  கட்டுரையை அல்லது கவிதையை நடத்த பெரும்பாடு பட்டு சாதித்துவிடுவார். ரமணன் சார் அதற்கு மாறாக ஒரு கட்டுரை அல்லது கவிதைக்காகக் குறைந்தது நாற்பது ஐம்பது கட்டுரைகளையாவது பரிசீலித்துவிட்ட பிறகுதான் அந்தக் கவிதையை வகுப்பறையில் நடத்த முன்வருவார். இதில் மாணவன் திறமைசாலியாக இருந்தால் பல கட்டுரைகளை எழுதுவதற்கான தரவுகளை இவர்களிடம் இருந்து திருடிவிடலாம். அது மாணவர்களின் சாமர்த்தியம்.
ரெஜானி பாடம் நடத்தியபோது பர்ன்ஸ் அர்னால்ட் கொண்டாடிய சிறந்த கவியாகத்தான் எனக்குக் காணப்பட்டார். தற்போது ரமணன் சார் புனித வில்லியில் மன்றாட்டு கவிதையை வகுப்பறையில் பாடம் நடத்தியபோது பர்ன்ஸ் ஒரு சிறந்த கவி மாத்திரமல்ல தலைசிறந்த கவி என்று எனக்குக் காணப்பட்டார். அதுவரை ஆங்கிலக் கவிஞர்களை அறிவுக்காகவும் மதிப்பெண்ணுக்காகவும்தான் படித்துவந்தேன். அவர்கள் ஒருமுறைகூட என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததில்லை. யாரேனும் ஒருவர் ஷெல்லியையோ கீட்ஸையோ வரிக்கு வரி மனப்பாடமாகச் சொன்னால் எனக்குக் கோபம் கோபமாக வரும். மற்றொரு பக்கத்தில் யூஜிசி தேர்வு இவர்களை அப்பட்டமான ஆங்கிலேய துரைமார்களாகவே காட்டும். அந்த விதத்தில் நான் ஒரு காந்தியவாதியாகிவிடுவேன். ரஷ்யர்கள் என்னைப் பாதித்ததுபோல இந்த ஆங்கில கவிதைகள் அதிகம் பாதித்தது இல்லை. பர்ன்ஸை வாசித்த பிறகு ஆங்கிலக் கவிதையைப் பற்றிய என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
ரமணன் சார் கவிதையை வாசித்து காட்டினார். கவிதை ஒரு பக்தன் தான் செய்த தவறுக்காக கடவுளிடம் மன்றாடும் மன்றாட்டாக எனக்குப்பட்டது. ஆரம்பத்தில் அது தாவிது மன்னன் தன்னுடைய சங்கீதத்தில் கடவுளிடம் மன்றாடுவது போன்று இருப்பதைக் கவனித்தேன். வாசிப்பு தொடர தொடர கவிதை மன்றாட்டாக இல்லாமல் கடவுளையே குற்றப்படுத்தும் ஒரு கலகக்காரனை நான் பார்க்க ஆரம்பித்தேன். தான் தவறு இழைத்தது தன்னுடைய விருப்பத்தின் படி அல்லவென்றும் அது ஒரு சோதனையாகத் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அதற்குக் கடவுளே முழு பொறுப்பாளி என்று தன் தவறுக்கு வருந்தாமல் கடவுளையே குற்றம் சாட்ட ஆரம்பித்து விடுவான். குற்றம் சாட்டி விட்டு திரும்பவும் தன் தவறை உணர்ந்தவன் போன்று மன்றாட ஆரம்பிப்பான். கொஞ்சம் தைரியம் கிடைத்தவுடன் தன்னை மன்னிக்கும்படி கடவுளையே கட்டளையிடும் தொனியில் “நீர் மன்னித்தால் அது உமக்குப் புகழ்ச்சி மன்னிக்காவிட்டால் கெட்ட பெயர் உமக்குதான்” என்று அதிகாரம் சற்று தூக்கலாகும் தொனியில் மன்றாட்டு அதிகாரத்தின் குரலாக மாறும். கவிதையை வாசிக்க கேட்ட எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்றாடுகிறவன் புனிதனும் அல்ல, கலகக்காரனும் அல்ல, கடவுளையே ஆணையிடும் அதிகாரியும் அல்ல. அவன் ஒரு கோமாளி. முழுக் கவிதையும் கோமாளித்தனத்தின் விளையாட்டு. கோமாளிகள் எப்போதும் உண்மையை உரக்க தங்களுடைய கோமாளித்தனத்தில் பேசிவிடுவார்கள். கேட்பவர்களுக்கு சிரிப்பு உண்டாகுமே தவிர ஆத்திரம் உண்டாகாது.
இந்தப் புனித வில்லியின் மன்றாட்டுக்குள் இருப்பது ஒரு கவிஞன். அவன் பக்தனோ, கலக்காரனோ அல்ல. உண்மையை வெளிப்படையாக பேச விரும்பும் ஒரு கவிஞன் அவ்வளவுதான். அவன் பேசியதால் மாற்றம் ஏற்பட்டதா இல்லையா என்பதுகூட அவனுக்குக் கவலையில்லை. தான் சொல்லவந்ததை இலக்கியப்படுத்திவிட்டான். இந்தப் புனித வில்லி கால்வின் மதத்தினரால் அதிகம் பாதிக்கப்பட்டவன். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சமூக எதிரிகள் அல்ல. அவர்கள் மிக உயர்ந்த கிறிஸ்தவ போதனையான ”நித்திய தெரிந்தெடுப்பு” “நம்பிக்கையினால் கிடைக்கும் மோட்சம்” என்ற மிக உயர்ந்த கிறிஸ்தவ உபதேசத்தைப் பின்பற்றுபவர்கள். இதனால் கடவுள் பயம் என்பது சிறிதும் இல்லாத மதமாக கால்வின் மதம் மாறிவிட்டது. எப்படியோ கடவுள் தங்களை மோட்சத்திற்கென்று முன் குறித்துவிட்டார். தாங்கள் செய்யும் எந்த நல்வினையும் தீவினையும் அந்தத் தெரிந்தெடுப்பை மாற்றப்போவதில்லை என்ற அசையாத நம்பிக்கை அவர்களை எதையும் செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது.
இதனால் பாதிக்கப்பட்டவன் தான் புனித வில்லி. ஒரு பக்கத்தில் குற்றவாளிகளை குற்றமுள்ளவர்கள் என்று அறிவிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் அவர்களை குற்றப்படுத்துகிறானோ அதைவிட தங்களுடைய மத நம்பிக்கை அவர்களைக் குற்ற மனப்பான்மையில் இருந்து விடுவித்துவிடும். அதற்கு அவன் முதலாவது மத நம்பிக்கையை உடைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதில் சாத்தியப்படுகிற காரியம் அல்ல. மத நம்பிக்கையில் கை வைப்பது தன்னையே தீயிலிட்டுக்கொண்டு அழித்துக் கொள்வதற்குச் சமம். எனினும் மதத்தின் நம்பிக்கை கேள்வி கேட்கப்படாவிட்டால் மதவாதிகளின் தீமை வெளிப்படாது. அதற்குப் புனித வில்லி கையாளும் ஒரு உத்தி தன்னை முற்றிலும் கோமாளியாக்கிகொள்வது. முதலாவது தன்னைக் கோமாளியாக்கிக் கொள்கிறான். இரண்டாவது அந்தக் கோமாளித்தனத்தில் மத நம்பிக்கையை முழுவதுமாகப் பகடியாக்குகிறான். மத நம்பிக்கை பகடியாக்கப்பட்டபின்பு எதிரிகளின் உண்மையான நிறம் தெரியவர ஆரம்பிக்கிறது. மத உபதேசத்தைக் கேள்வி கேட்டு அதை உடைப்பது கோமாளியின் பகடியே.

கவிதையை வாசித்து முடித்தபின்பு ”சார் இது Dead Souls கதையில் வரும் நாயகனை ஞாபகபடுத்துகிறது” என்றேன். மற்றொரு முறை வாசித்த போது கவிதை கிராண்ட் இன்குவிசிட்டரை நினைவூட்டியது. புனித வில்லி ஏறக்குறைய Dead Souls கதையின் நாயகனாகக் காணப்பட்டான். கவிதையின் பகடி கிராண்ட் இன்குவிசிட்டரின் பிரதியின் பகடியின் தொனி தெரிந்தது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஏற்கனவே நான் தாஸ்தாவஸ்கி பைத்தியம் என்பது எனக்கே தெரிய ஆரம்பித்தது. இதில் மேலும் ரஸ்ய இலக்கியத்தில் ராபர்ட் பர்ன்ஸை பார்ப்பதும் அல்லது பர்ன்ஸில் ரஷ்யர்களைப் பார்ப்பதும் அந்தப் பைத்தியத்தின் வெளிப்பாடோ என்று தீர்மானமாகச் சொல்லாமல் வெறும் கருத்தாக மாத்திரம் ரமணன் சாரிடம் கூறினேன். பின்புதான் பர்ன்ஸ் ரஷ்யர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவலைத் தெரிந்துகொண்டேன். இப்போது இந்த ரஷ்யர்களுக்காகப் பர்ன்ஸை அதிகம் ஆராய வேண்டியிருக்கிறது. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...